திண்டுக்கல் மாநகராட்சியில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி : சுகாதார அலுவலர் தகவல்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நேற்றுடன் ஒரு லட்சம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று மாநகராட்சி சுகாதார அலுவலர் பி.இந்திரா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள முகாம்களில் போதிய அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. மாநகராட்சியில் உள்ள மொத்த மக்கள்தொகையில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இவர்களில் நேற்று வரை ஒரு லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இது 60 சதவீதமாகும்.
தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் மக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது. மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த ஆட்சியர் ச.விசாகன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
விரைவில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டுவோம் என்று கூறினார்.
