Published : 01 Sep 2021 03:16 AM
Last Updated : 01 Sep 2021 03:16 AM

தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் - கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் : திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் வலியுறுத்தல்

திருப்பூர்

கோயில்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க (சிஐடியு) ஆலோசனைக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் பி.முருகேஷ் தலைமை வகித்தார். செயலாளர் பி.பாலன் வரவேற்றார்.

தீர்மானங்கள்

திருப்பூரில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். காலாவதியான அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பார் நிதித்திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரத்தை அனைத்து வியாபாரிகளுக்கும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்ததைபோல, ஏழை, எளிய சாலையோர வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.15 ஆயிரம் வட்டியில்லா கடன், வாராந்திர அடிப்படையில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டப்படி, வியாபாரம் செய்யும் இடத்தில் இருந்து சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டி வழங்க வேண்டும்.

கோயில் திருவிழாக்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாலையோர கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும். நகர விற்பனைக் குழுவில் 15 பேரில் 6 பேர் சாலையோர வியாபாரிகள் என்ற விகிதத்தை மாற்றி, மூன்றில் இரு பங்கு என மாற்றம் செய்ய வேண்டும். நகர விற்பனைக் குழுவை 3 மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது தேவைப்படும்போதோ குறுகிய கால இடைவெளியில் கூட்டவேண்டும்.

சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் சட்டம் குறித்து அரசு அதிகாரிகள், காவல் துறையினருக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் நீதிமன்றங்கள் மூலமாக பெறும் ஆணைகளை மதித்து, அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்குப்பின் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடியை நேரில் சந்தித்த சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர், மேற்கண்ட தீர்மானங்களை கோரிக்கை மனுவாக அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x