ஓசூர் அரசு மருத்துவமனையை - மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

ஓசூர் அரசு மருத்துவமனையை -  மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை  :  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Updated on
1 min read

ஓசூர் அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனை யாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பாத்தக்கோட்டா கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன், பிரியதர்ஷனி தம்பதியின் 7 மாத குழந்தை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதற்கு சிகிச்சை அளிக்கக் கோரி அமைச்சரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றஅமைச்சர், இந்நோய் தொடர்பாக சட்டப்பேரவையில் தெரிவிக்க உள்ளேன். குழந்தைக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து மருத்துவக் குழுவினருடன் ஆலோ சனை செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அசோக் லேலண்ட் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ், டி.மதியழகன், டி.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பரமசிவன் வரவேற்றார்.

சமூக பொறுப்புணர்வு திட்ட கூட்டாண்மை தலைவர் பாவசுந்தர் தொடக்கவுரையாற்றினார். இவ் விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

10 ஆண்டுகளாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எவ்வித பணப்பலன்கள் இல்லாமல் சிரமம் அடைந்து வருவதாக மனுக்களை அளித்து வருகின்றனர். கரோனா நோய் தடுப்பு கட்டுப்படுத்துவதில் 3 மாதங்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் தொடர்புடைய சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி நிர்வாக ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஓசூரில் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஓசூரை மையமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதல்வர் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், சத்யா, முன்னாள் எம்பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், ஓசூர் முன்னாள் நகர் மன்ற தலைவர் மாதேஸ்வரன், திமுக நிர்வாகி கே.வி.எஸ் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in