Published : 31 Aug 2021 03:14 AM
Last Updated : 31 Aug 2021 03:14 AM

வேலூரை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்திலும் - ‘டைடல் பார்க்’ அமைய நடவடிக்கை எடுக்கப்படும் : வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் தகவல்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, எம்பிக்கள் கதிர்ஆனந்த், அண்ணாதுரை.

திருப்பத்தூர்

வேலூரை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்திலும் ‘டைடல் பார்க்’ அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் எம்பி கதிர்ஆனந்த் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரிகுடியிருப்புத்திட்ட வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் வரவேற்றார். சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர்ஆனந்த் (வேலூர்), சி.என்.அண்ணாதுரை (தி.மலை) ஆகியோர் 691 பயனாளிகளுக்கு ரூ. 16 கோடியே 58 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது, வேலூர் எம்பி கதிர்ஆனந்த் பேசும்போது, "தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்டுள்ள துரித நடவடிக்கையே இதற்கு காரணம்.

தேர்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின் றன. புதிதாக தொடங்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்துக்கு தேவையான துறை அலுவலகங்கள் விரைவில் கொண்டு வரப்படும். மாணவர்களுக்கு தேவையான கல்விக் கடன்கள் தடையில்லாமல் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும்.

நாட்றாம்பள்ளி அடுத்த மல்ல குண்டா பகுதியில் 1,000 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். அதேபோல, வேலூரை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்திலும் ‘டைடல் பார்க்’ கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் இம்மாவட்டம் வளர்ச்சி பெறும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும் போது, ‘‘இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத்திட்ட வீடுகள் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 976 மனுக்களில் முதற் கட்டமாக 691 பயனாளிகளுக்கு ரூ.16.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 7 நாட்களில் மனுக்கள் மீது பரிசீலினை செய்து நலத்திட்ட உதவிகள்வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள வர்களுக்கு விரைவில் வழங்கப் படும்’’என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண் ஒழுங்கு விற்பனைக் கூட கூட்டுறவு சங்கத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x