சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு - வங்கிகளில் கடன் வழங்குவதில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி : லகு உத்யோக் பாரதி அமைப்பின் தேசிய செயலாளர் தகவல்

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு -  வங்கிகளில் கடன் வழங்குவதில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி :  லகு உத்யோக் பாரதி அமைப்பின் தேசிய செயலாளர் தகவல்
Updated on
1 min read

வங்கிகளில் சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக,லகு உத்யோக் பாரதி அமைப்பின்தேசிய செயலாளர் எம்.மோகனசுந்தரம் தெரிவித்தார்.

சிறு, குறு தொழில்களுக்கான தேசிய சேவை அமைப்பான லகு உத்யோக் பாரதி அமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், திருப்பூரில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் தேசிய செயலாளர் எம்.மோகனசுந்தரம் தலைமை வகித்தார். தேசிய தலைவர்பல்தேவ்பாய் பிரஜாபதி, துணைத்தலைவர் ஹரிஹரன் ராமமூர்த்திஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். மாநிலத் தலைவர் எம்.எஸ்.விஜயராகவன், பொதுச் செயலாளர் வி.ஜெயக்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் தேசிய செயலாளர் எம்.மோகனசுந்தரம் கூறும்போது, "லகு உத்யோக் பாரதி அமைப்பு, நாட்டில் 500 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அமைப்பு செயல்படுகிறது.

சிறு, குறு தொழில் அமைப்பு களை மேம்படுத்த பாடுபட்டு வருகிறது. சிறு, குறு தொழில் அமைப்புகளின் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகளிடம் எடுத்துச் செல்லும் அமைப்பாக, லகு உத்யோக் பாரதி உள்ளது. மேலும், சிறு, குறு தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 25 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இன்று(நேற்று) நடைபெற்ற மாநிலப்பொதுக்குழுக் கூட்டத்தில் சிறு, குறுதொழில் வளர்ச்சிக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி, தற்போது ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

வங்கிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன.இதனை சரி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசுக்கு லகு உத்யோக் பாரதி அமைப்பு விடுத்த கோரிக்கையின் பயனாக சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மிக முக்கியப் பிரச்சினையாக இருந்த ‘இன்ஸ்பெக்டர் ராஜ்' முறை தற்போது களையப்பட்டுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in