

எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம், ஆஸ்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம், செந்தமிழ்த் திருத்தேர் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து நடத்துகின்ற தூயதமிழ்ப் பயிற்சிப் பட்டறை கடந்த ஆக.21 முதல் 30-ம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து இணையவழியில் நடந்து வருகிறது.
தொடக்க நாள் நிகழ்வில் தமிழ்ப்பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் தூயதமிழின் தேவைகள் குறித்து தனது தலைமை உரையில் எடுத்துரைத்தார். ஆஸ்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் முனைவர் சந்திரிகா சுப்பிரமண்யன் முன்னிலை வகித்தார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் திட்ட இயக்ககத்தின் மேனாள் இயக்குநர் தங்ககாமராசு இப்பயிற்சிப் பட்டறையின் நோக்கத்தை எடுத்துரைத்தார். செந்தமிழ்த் திருத்தேர் அமைப்பின் இயக்குநர் இளங்கவி திவாகர் வரவேற்புரையாற்றினார்.
முதல் நாள் பயிற்றுநர் உரையில் ‘எது தூயதமிழ்?’ என்ற தலைப்பில் தமிழறிஞர் புலவர் வே.பதுமனார் உரை நிகழ்த்தினார். தமிழ்ப் பேராயத்தின் செயலர் முனைவர் பா.ஜெய்கணேஷ் நன்றி கூறினார்.
‘வேர்ச்சொல்லாய்வு’ என்ற தலைப்பில் புலவர் மா.பூங்குன்றன், ‘படைப்பாக்கங்களில் தூயதமிழ்’ என்ற தலைப்பில் புலவர் வெற்றிச்செழியன், ‘சொல்லாக்கத்தின் அடிப்படை’ என்ற தலைப்பில் முனைவர் இரா.கு.ஆல்துரை, ‘மொழிபெயர்ப்பில் தூயதமிழ்’ என்ற தலைப்பில் முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன், ‘நற்றமிழ் இலக்கியவரிசை’ என்ற தலைப்பில் பாவலர் தமிழ் இயலன், ‘துறைதோறும் தூயதமிழ்’ என்ற தலைப்பில் செ.மன்னர் மன்னன், ‘கணினித் தமிழ்’ என்ற தலைப்பில் முனைவர் இரா.குணசீலன், ‘அன்றாட வாழ்வில் தூயதமிழ்’ என்ற தலைப்பில் முனைவர் கி.குணத்தொகையன், ‘கலைச்சொல் விளக்கம்’ என்ற தலைப்பில் புலவர் கதிர்.முத்தையன் போன்ற தமிழறிஞர்கள் சிறப்புரையாற்றி வருகின்றனர்.
இணையவழியில் நடைபெறும் இந்தத் தூயதமிழ்ப் பயிற்சிப் பட்டறையில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றுவருவது குறிப்பிடத்தக்கது. நிறைவு நாளன்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கோ.விஜயராகவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.