

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா மற்றும் குட்கா போன்றவற்றை விற்பனை செய்தால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் புகையிலை, பான்மசாலா மற்றும் குட்கா போன்றவற்றின் விற்பனை ஒழிப்பு குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மா.சவுமியாசுந்தரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஆட்சியர் பேசியது: உணவு வணிகர்கள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனா மற்றும் டெங்கு நோய் தடுப்பு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்களை விற்பனை செய்தால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் ஆக.31-க்குள் வருடாந்திர விற்பனை மற்றும் கொள்முதலை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் ஒரு நாளைக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். உணவின் தரம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை குறித்து 9894545728 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.