Published : 30 Aug 2021 03:16 AM
Last Updated : 30 Aug 2021 03:16 AM

உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் : அதிமுக இலக்கிய அணி மாநில செயலாளர் வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அதிமுக இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதிமுக இலக்கிய அணியின் மாநில செயலாளர் வைகைச்செல்வன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும், மக்கள் செல்வாக்கை அதிமுக இழக்கவில்லை. கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது.

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். அதிமுக தொண்டர்கள் மனம் தளரக்கூடாது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான ஊராட்சிகளை கைப்பற்ற அதிமுக தொண்டர்கள் அயராமல் உழைக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிமுகவுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என்பதை இந்த தேர்தலில் நாம் நிரூபிக்க வேண்டும். அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி னால் வெற்றி நம்வசம்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, செய்தி யாளர்களிடம் அதிமுக இலக்கிய அணியின் மாநில செயலாளர் வைகைச்செல்வம் கூறும்போது, ‘‘பொய்யான வாக்குறுதியை அளித்து திமுக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் எனக்கூறி ஊர் முழுவதும் புகார் பெட்டி வைத்து, அந்த பெட்டி மூலம் பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனது அதிகார பலத்தை பயன்படுத்தக்கூடாது. நியாயமான முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு’’என்றார்.

இக்கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x