Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM

திருவள்ளூரில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு - ஊனம் தடுப்பு, மருத்துவ மறுவாழ்வு முகாம் :

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஊனம் தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு முகாம் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், நேற்று திருவள்ளூரில் நடைபெற்றது.

இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தொழுநோயாளிகளுக்கான உதவி உபகரணங்களையும், கரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து ஆட்சியர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கு, தனியார் தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவ பணிகளுக்கான (தொழுநோய்) துணை இயக்குநர் அலுவலகம் சார்பில் ரூ.3.30 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருட்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினார்.

முகாமின்போது, ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேரில், 0.51 சதவீதம் என்ற அளவில் தொழுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்டத்தில் நிரந்தர உடற்பாதிப்பு உள்ள தொழுநோயாளிகளின் எண்ணிக்கை 413. தொழுநோய் பாதிப்பு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்பொழுது குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. இதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் 100 சதவீதம் குணப்படுத்த இயலும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கூடுதல் இயக்குநர் (தொழுநோய்) .அமுதா, துணை இயக்குநர் (குடும்ப நலம்) இளங்கோவன், துணை இயக்குநர் (காசநோய்) லட்சுமி முரளி, துணை இயக்குநர் (தொழுநோய்) (பொறுப்பு) ஸ்ரீதேவி மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x