சேலம் அருகே கல் குவாரியால் மக்கள் பாதிப்பு வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல் :
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகேயுள்ள பெரியகவுண்டாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. கல் குவாரிக்கு சென்று வரும் கனரக வாகனங்களால் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது.
மேலும், பாறைக்கு வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், வெடியால் நிலத்தடி நீரோட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, கல் குவாரிக்கு தடை விதிக்கக்கோரி ஜல்லி கற்களை ஏற்ற வந்த வாகனங்களை சிறை பிடித்து, பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கல் குவாரியால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறியதாவது:
பெரியகவுண்டாபுரத்தில் சுமார் 100 அடி உயரமுள்ள மலையில் 10 ஆண்டுகளாக கற்கள் உடைக்கப்பட்டு வருகிறது. தற்போது மலை சமதளமாகி 100 அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் தோண்டி பாறைகள் தகர்க்கப்பட்டு வருகிறது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல் குவாரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் ஜல்லி, எம் சாண்ட் ஏற்றுவதற்காக சென்று வருகிறது.
இதனால், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து காரிப்பட்டி, ஆலாங்குட்டை, பெரியகவுண்டாபுரம், சின்ன கவுண்டாபுரம் உள்ளிட்ட கிராம மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட கிராம சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குவாரியில் சாலை அமைக்கப் பயன்படும் தார் கலக்கும் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டாரம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
பாறைகளை தகர்க்க சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதால், வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. வெடிக்கும் போது கற்கள் பல மீட்டர் தூரத்துக்கு பறந்து வந்து விழுகிறது. மேலும், மண் துகள்கள் பரவுவதால் சுற்றுவட்டார பகுதி முழுவதும் புழுதிப் படலமாக உள்ளது. புழுதிக் காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
சக்தி வாய்ந்த வெடி பயன்படுத்துவதால் சுற்றுவட்டாரத்தில் நீரோட்டமும் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டது. புழுதிப் படலத்தால் தோட்டங்களில் எந்த பயிரும் சரியாக வளருவதில்லை. கால்நடைகளும் புழுதியுடன் கூடிய புற்களை மேய்வதால் அவற்றின் உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்களுக்கும், விவசாயத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கல்குவாரியை இயக்கக்கூடாது. பழுதான சாலையை சீரமைத்துத் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகவலறிந்து வந்த காரிப்பட்டி போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
