

பெரம்பலூர் மாவட்டத்துக்கான நலத்திட்ட அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ப. வெங்கடபிரியா தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாய சங்க நிர்வாகிகள் பேசியது:
ஆர்.ராஜா சிதம்பரம்: பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை 6 மாதங்களிலேயே திருப்பிச் செலுத்தக் கோருகின்றனர். கடன் வசூலிக்க ஓராண்டு அவகாசம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழை உடனே வழங்க வேண்டும்.
நீலகண்டன்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையான யூரியா தட்டுப்பாடு உள்ளதால், விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
எனவே, தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ்: நிகழாண்டு தமிழக பட்ஜெட்டில் பெரம்பலூர் மாவட்டத்துக்கான எவ்வித நலத்திட்ட அறிவிப்புகளும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, விவசாயக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம், ஜவுளிப் பூங்கா, சின்னமுட்லு அணை திட்டங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்லதுரை: துறைமங்கலம், அரணாரை ஏரிகளில் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் குப்பையைக் கொட்டி அசுத்தம் செய்துவருகிறது. இதைத் தடுத்து, ஏரிகளில் கொட்டப்பட்ட குப்பையை உடனே அகற்ற வேண்டும்.
வேணுகோபால்: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் 40 ஆண்டுகால கனவு திட்டமான சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை உடனே நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி, கூட்டுறவு இணைப் பதிவாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.