

குரோம்பேட்டை பகுதியில் நெமிலிச்சேரி ஏரி 37 ஏக்கர் பரப்பளவு இருந்தது. ஆக்கிரமிப்புகளால் ஏரி சுருங்கி தற்போது 10 ஏக்கர் பரப்பளவு மட்டுமே உள்ளது. குடியிருப்போர் நல சங்கங்கள் பங்களிப்புடன் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.18 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது.
ஏரி பாதுகாப்புக் குழுவினர், சமூக ஆர்வலர்கள் வழங்கிய நன்கொடையைக் கொண்டு ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியை ஊக்கப்படுத்தும் விதமாக பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தனது ஒரு மாதம் ஊதியத்தை நன்கொடையாக வழங்கினார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் நேற்று ஏரியில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து சுற்றுச் சுவர் அமைக்க, ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து திருநீர்மலையில் உள்ள வீரராகவன் ஏரியை ஆய்வு செய்த ஆட்சியர் ஏரியில் கழிவு நீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நெமிலிச்சேரி ஏரியை புனரமைக்க, ரூ.9 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பியுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.