மாநில நல்லாசிரியர் விருதுக்கு நேர்காணல் நடத்தாமல் பரிந்துரை : சிவகங்கை ஆசிரியர்கள் புகார்

மாநில நல்லாசிரியர் விருதுக்கு       நேர்காணல் நடத்தாமல் பரிந்துரை  :  சிவகங்கை ஆசிரியர்கள் புகார்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு நேர்காணல் நடத்தாமல் பரிந்துரை செய்துள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தின மான செப்.5-ம் தேதி சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை (நல்லாசிரியர்) வழங்கி தமிழக அரசு கவுரவிக்கிறது. அதன்படி இந்தாண்டு மாநிலம் முழுவதும் 385 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இவ்விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைத்தது.

மேலும் இவ்விருது பெற கரோனா காலத்தில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளாத ஆசிரியர்களைத் தேர்வு செய்யக் கூடாது. ஐந்து ஆண்டுகள் கல்விப் பணியில் புகார் இருக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து சிவகங்கை வருவாய் மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் விருதுக்கு விண்ணப்பித்தனர். ஆக.20-ம் தேதி விருதுக்கான பரிந்துரை பட்டியலை சிவகங்கை கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்துக்கு அனுப்பினர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு வரை நேர்காணல் நடத்திய பிறகே பரிந்துரை பட்டியலை அனுப்பியதாகவும், இந்தாண்டு நேர்காணல் நடத்தாமலேயே பட்டியலை அனுப்பி உள்ளதாகவும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் கூறுகையில், ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது. அதன்பிறகே பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட்டது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in