Published : 24 Aug 2021 03:15 AM
Last Updated : 24 Aug 2021 03:15 AM

திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் - இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மக்கள் நாடாளுமன்றம் :

மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் மக்கள் நாடாளுமன்றம் எனும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகரக் குழு சார்பில் மன்னார்குடி பந்தலடியில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. மக்கள் நாடாளுமன்ற சபைத் தலைவராக பிச்சைக்கண்ணு செயலாற்றினார்.

இதில், வேளாண் துறை அமைச்சராக விவசாய தொழிலாளர் சங்க நகரத் தலைவர் வி.எம்.கலியபெருமாள் செயல்பட்டு, வேளாண் சட்டங்களை தாக்கல் செய்து பேசினார்.

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான வை.சிவபுண்ணியம், ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் புண்ணீஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் ரகுபதி, விசிக நகரச் செயலாளர் அறிவுக்கொடி, மதிமுக நகரச் செயலாளர் சண்.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, கட்சியின் ஒன்றியக் குழு சார்பில், மன்னார்குடி ஒன்றியம் ராமபுரத்தில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றத்தில் தலைவராக வி.சிவானந்தம் செயலாற்றினார். கூட்டத்தில், கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை அருள்ராஜன், இளைஞர் மன்ற ஒன்றியச் செயலாளர் எஸ்.பாப்பையன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.பழனிமலை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற அவையில், விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். பெகாசஸ் தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும். கார்ப்பரேட்டுக்கு தாராள சலுகை வழங்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ரயில், வங்கி, காப்பீடு, ராணுவம் போன்றவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி உறையூர் குறத்தெருவில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றத்தின் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் மற்றும் அமைச்சர்களாக மாநிலக்குழு உறுப்பினர் கே.ரவி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் நடராஜா உள்ளிட்ட 5 பேர் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகள் வரிசையில் காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் ஜவகர், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஜான்குமார், திமுக சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், வேளாண் திருத்தச் சட்டங்கள், மின்சார சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானங்களை ஏஐயுடிசி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் முன்மொழிய, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 இடங்களில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. ஆலங்குடி அருகே குளமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சி நிர்வாகி ராமநாதன் தேசியக் கொடியேற்றினார்.

மாவட்டச் செயலாளர் மு.மாதவன், ஒன்றியச் செயலாளர் ஆர்.சொர்ணக்குமார், துணைச் செயலாளர் த.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆக.27-ம் தேதிக்குள் மாவட்டத்தில் 100 இடங்களில் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த சேனாபதி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். துணைச் செயலாளர்கள் பரிசுத்தம், பன்னீர் செல்வம் உட்பட பலரும் கலந்துகொண்டனர். அதேபோல, தா.பழூர் கடைவீதியில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர் அபிமன்னன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் உலகநாதன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x