

பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க ரூ.2.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓராண்டாக கிடப்பில் இருந்த அந்தப் பணிகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன.
காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு தனியாக அலுவலகம் கட்ட கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.2.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. ஆனால் இதற்கான இடம் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பொதுப்பணித் துறை நீர் வள ஆதார அமைப்பின் பயணியர் மாளிகை அருகே இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால் பொதுப்பணித் துறைதங்களுக்கு மாற்று இடம் வழங்காமல் இந்த இடத்தை தர முடியாது என்று கூறிவிட்டதால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் பொதுப்பணித்துறைக்கு மாற்று இடம் வழங்கியதைத் தொடர்ந்து அவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க தடையில்லாச் சான்று வழங்கினர். இதைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
தற்போது கட்டிடத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓராண்டாக கிடப்பில் இருந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கும் பணி தற்போது தொடங்கி வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.