Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிதிறப்பதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், வரும் 1-ம் தேதி முதல் 9, 10, 11, மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதிக்குள் உள்ள பள்ளிகளின் வளாகங்கள், வகுப்பறைகள், குடிநீர் தொட்டி, மேல்நிலைத் தேக்கத் தொட்டி, கழிப்பறைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கவும், தனியார்மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களை அந்தந்த பள்ளி நிர்வாகமே தூய்மை செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியிருப்பதை முதன்மை கல்வி அலுவலர் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளிகளிடமிருந்து பெற்று சுகாதாரப்பணி துணை இயக்குநர் வாயிலாக அடுத்த ஒருவார காலத்துக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவேண்டும்.
மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் பொருட்களை பள்ளி மற்றும் அதன் வளாகப் பகுதிகளில் இருந்த களப்பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருவதுடன், கைகளை கைகழுவும் திரவம் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். சமூக இடைவெளியுடன் இருக்கைகள் ஒதுக்கி, சுழற்சி முறையில் 50 சதவீதம் மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்த முதன்மை கல்வி அலுவலர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மீனாட்சி, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT