Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் - ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் :

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் நேற்று ஆவணித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

நாகர்கோவில்

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற இப்பதியில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி முத்திரி பதமிடுதலுடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தலைமைபதியைச் சுற்றி வலம் வரும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து, ‘‘அய்யா, சிவசிவா அரகரா’ என்ற பக்தி கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது. குரு பால ஜனாதிபதி கொடியேற்றி வைத்தார்.

குருக்கள் ராஜவேல், பால லோகாதிபதி மற்றும் குறைந்த அளவு பக்தர்கள் இதில் பங்கேற்றனர். தொடர்ந்து வாகன பவனியும், அன்னதானமும் நடைபெற்றது. இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

வரும் 30-ம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவில் இரண்டாம் நாளான இன்று இரவு அய்யா வைகுண்டர் பரங்கி நாற்காலியில் வீதியுலா நடைபெறுகிறது. மூன்றாம் நாள் விழாவில் அன்ன வாகனத்தில் பவனியும், நான்காம் நாள் விழாவில் பூஞ்சப்பர வாகனத்தில் வலம்வருதலும், ஐந்தாம்நாள் பச்சை சார்த்தி சப்பரத்தில் பவனி வருதலும், ஆறாம்நாள் கற்பக வாகனத்தில் பவனியும், ஏழாம்நாள் சிவப்புசார்த்தி கருட வாகனத்தில் பவனியும் நடைபெறுகிறது. 8-ம் திருவிழாவான வரும் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டர் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 30-ம் தேதி திருவிழா நிறைவடைகிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் பணி விடை, வாகன பவனி ஆகியவை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x