பங்களிப்புத் தொகையோடு வீடுகள் வழங்க - விண்ணப்பம் பெறும் முகாமில் ஏராளமானோர் திரண்டனர் :

பங்களிப்புத் தொகையோடு வீடுகள் வழங்க  -  விண்ணப்பம் பெறும் முகாமில் ஏராளமானோர் திரண்டனர் :
Updated on
1 min read

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின்திருப்பூர் கோட்டம் சார்பில், குடியிருப்பு தொடர்பான மனுக்கள் பெறும் முகாம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் குறைதீர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் திருப்பூர்மாநகர், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று விண்ணப்பங்களை அளித்தனர்.

இது தொடர்பாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

திருப்பூர் வீரபாண்டி, நெருப்பெரிச்சல், மடத்துக்குளம், உடுமலைபேட்டை உட்பட பல்வேறு இடங்களில் குடிசை மாற்று வாரியம் மூலம்வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும்ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமைஅடிப்படையில் வீடுகள் வழங்கப்படும்.

பயனாளியின் பங்களிப்புத் தொகையாக ரூ.1 லட்சத்து ஆயிரம் தொடங்கிஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொருதொகை நிர்ணயித்து, வீடுகள் பெறும் பயனாளிகளிடம் தொகை வசூலிக்கப் படும்.

யாருக்கும் இலவசம் இல்லை.அதற்கு முன்னதாக தகுதியுள்ள நபர்களிடம் விண்ணப்பங்களை பெற்று வருகிறோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.

விண்ணப்பங்களின் தகுதி அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். பல ஆயிரம் எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்து குவிந் துள்ளன.

இதில் தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கான வீடுகளை விலைக்கு வழங்குவோம். குறிப்பாக தொழிலாளர்கள் குடியிருக்க வீடு கேட்டு வருகின்றனர். ஆகவே அவர்களின் குறைகளை போக்கும் வகையில், தற்போது இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.

இந்த முகாமையொட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த சிலர் கூறும்போது,

‘‘குடிசை மாற்று வாரியம் ஒதுக்கும்வீடுகளை, பெற்றுத் தருவதாகக்கூறி இடைத்தரகர்கள் பலர் பணம்சம்பாதிக்க தொடங்கி உள்ளனர்.மீண்டும் வரும் 26-ம் தேதி பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடப்பதால், ‘இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்’ என்பது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை முகாம் பகுதியில் வைக்க வேண்டும். அதேபோல் வீடுகள் யாருக்கும் இலவசம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஏனென்றால் ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் இடைத்தரகர்களாக வலம் வருபவர்கள், வீடுகளை இலவசமாக பெற்றுத்தருவதாகக் கூறி, பணம் பறிப்பதுதான் பொதுமக்களின் ஏமாற்றத்துக்கு மிக முக்கியக் காரணம் ’’என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in