Published : 20 Aug 2021 06:40 AM
Last Updated : 20 Aug 2021 06:40 AM

திருத்தளிநாதர் கோயில் யானை மரணம் : குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட பக்தர்கள் அஞ்சலி

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் இறந்த யானை சிவகாமிக்கு அஞ்சலி செலுத்திய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் யானை சிவகாமி மரணமடைந்தது. ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பத்தூரில் குன்றக்குடி தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட திருத்தளிநாதர் கோயிலுக்கு 1967-ம் ஆண்டு சிறுகூடல் பட்டியைச் சேர்ந்த விசாலாட்சி என்பவர் 2 வயது குட்டி யானையை நேர்த்திக்கடனாகக் கொடுத்தார். அந்த யானையை சிவகாமி என்று பெயரிட்டு பக்தர்கள் அழைத்து வந்தனர்.

கடந்த 52 ஆண்டுகளாக இறைப்பணி செய்த யானை சிவகாமிக்கு கால் வலி இருந்து வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. சத்தியமங்கலம் அரசு வனத்துறை மருத்துவர் அசோக் குமார், கால்நடை மருத்துவர்கள் பால கிருஷ்ணன், அன்புநாயகம் ஆகியோர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி யானை நேற்று உயிரிழந்தது.

யானையின் உடலுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால், மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வரன், டிஎஸ்பி பொன்ரகு, வட்டாட்சியர் ஜெயந்தி, வனச்சரக அலுவலர் மதிவாணன் மற்றும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பால், மஞ்சள், பட்டு வஸ்திரம் சாத்தி யானைக்கு இறுதிசடங்குகள் செய்யப் பட்டன. பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x