

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங் கும் ஊக்கத்தொகையை விடுவிக்க மறுப்பதாக தேசியமய வங்கி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், முன்னோடி வங்கி மேலாளர் உள்ளிட்டோருக்கு, அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் அனுப்பியுள்ள மனு: மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்து வருகிறது. ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த நிதியை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வங்கியிலிருந்து பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பூதலூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் சேமிப்புக் கணக்கு தொடங்கி, வரவு- செலவு செய்து வருகின்றனர். இந்த வங்கியில் கடந்த 2016-ம் ஆண்டு விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் நிலுவை இருப்பதாகக் கூறி, மத்திய அரசு வழங்கும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட ஊதியம், சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத் தொகை ஆகியவற்றை விவசாயிகள் எடுக்க முடியாத வகையில், வங்கிக் கணக்கை வங்கி மேலாளர் நிறுத்தி வைத்துள்ளார்.
எனவே, விவசாயிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிதியுதவி, மானியத் தொகையை வங்கி நிர்வாகம் உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.