Published : 20 Aug 2021 06:41 AM
Last Updated : 20 Aug 2021 06:41 AM

திருச்செந்தூர் அருகே ஓடக்கரை பகுதியிலிருந்து - இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் பறிமுதல் : 2 பேர் கைது, சரக்கு வேன், 8 பைக்குகள் சிக்கின

திருச்செந்தூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகள் மற்றும் சரக்கு வேன். (அடுத்த படம்) பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2.1 டன் எடையுள்ள மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையில் சமையல் மஞ்சளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் தமிழகத்தில் இருந்துகடல் வழியாக அதை கடத்துவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க கியூ பிரிவு போலீஸார் தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் அருகேயுள்ள ஓடக்கரை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சிலர் மஞ்சள் கடத்துவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆய்வாளர் விஜயஅனிதா தலைமையில், உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், வில்லியம் பெஞ்சமின் உள்ளிட்டோர் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் நேற்று அதிகாலை 3.10 மணியளவில் ஓடக்கரை கடற்கரை பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரையில் நின்ற சரக்கு வேனில் இருந்து இருவர் மஞ்சள் மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தனர். உடனே போலீஸார் 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி அருகேயுள்ள கரையிருப்பு ரைஸ்மில் தெருவை சேர்ந்த உடையார் மகன் இசக்கிபாண்டி (38), தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த வைரவன் மகன் ராம்குமார் (28) என தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸார், தலா 30 கிலோ எடைகொண்ட 70 மூட்டைகளில் இருந்த2.1 டன் விரலி மஞ்சள், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன்மற்றும் 8 மோட்டார் சைக்கிள்களைபறிமுதல் செய்தனர். மஞ்சளை இவர்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x