

தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தேசிய கொடியேற்றி, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது: தூத்துக்குடி வஉசி துறைமுகம் இந்த நிதியாண்டில் ஜூலை வரை 11.33 மில்லியன் டன் சரக்குகளையும், 2.68 லட்சம் சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு, கடந்த நிதியாண்டை விட 7.14 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் வஉசி துறைமுகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது.
துறைமுகத்தின் 9-வது கப்பல் தளம் 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன்கொண்ட துறைமுகத்தின் 3-வது சரக்கு பெட்டக முனையமாக ரூ.434.17 கோடி செலவில் மாற்றப்படவுள்ளது. பொது சரக்குகளை கையாளுவதற்காக மூன்றாவது வடக்கு சரக்கு தளம் ரூ.403 கோடியில் கப்பல் தளமாக மாற்றப்படவுள்ளது.
வஉசி துறைமுகத்தில் மின்சார கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரியமின் சக்தி ஆலை நிறுவும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. கூடுதலாக 270 கிலோவாட் மேற்கூரை சூரியமின் சக்தி ஆலை, 2.8 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவப்படவுள்ளது. சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்வதற்கான சிறப்பு நிலையங்களை (சார்ஜிங் ஸ்டேஷன்) நிறுவ திட்டமிடப் பட்டுள்ளது என்றார் அவர்.