Published : 16 Aug 2021 03:22 AM
Last Updated : 16 Aug 2021 03:22 AM

அரசு பள்ளிகளில் சுதந்திர தின விழா :

சுதந்திர தினத்தையொட்டி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் நேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

வேலூர்/திருப்பத்தூர்

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த ஜமால்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கரோனா பேரிடர் காலத்தில் களப்பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் தூய்மைப்பணியாளர்களை கொண்டு தேசிய கொடி நேற்று ஏற்றபட்டது.

இதைத்தொடர்ந்து, தூய்மைப்பணியாளர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. மேலும், கரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்திக்கொண்ட பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தினத்தையொட்டி ‘ஆன்லைன்’ மூலம் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் சக்திவேல் என்பவர் வீடுகளுக்கு நேரில் சென்று பரிசுப்பொருட்களை வழங்கிப் பாராட்டினார்.

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, முன்னாள் மாணவர்களின் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் சிறந்த 10 மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், காட்பாடி இளம் செஞ்சிலுவை சங்க அவைத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், உதவி தலைமை ஆசிரியர் செலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப்பணியாளர் களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கரோனா பேரிடர் காலத்தில் களப் பணியாற்றிய சுகாதாரப்பணிகள், தூய்மைப்பணியாளர்களின் பணியைப் பாராட்டி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் அடுத்த ராஜாவூர் அரசுப்பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்கள், கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தினர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.

அதேபோல. வேலூர் திருவள்ளுவர் சேவா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x