சுந்தரமூர்த்தி நாயனார் கோயிலில் குருபூஜை விழா :
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு உட்பட்ட சுந்தரமூர்த்திநாயனார் கோயிலில், சுந்தரமூர்த்தி நாயனார்குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.
கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றான அவிநாசியில், தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், அவிநாசியில் முதலைஉண்ட பாலகனை பதிகம் பாடி, 3 ஆண்டு வளர்ச்சியுடன் உயிர்ப்பித்து கொடுத்தார். சுந்தரமூர்த்திநாயனார் குருபூஜை விழா, அவிநாசி தாமரைக்குளத்தில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் சன்னதியில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
அதிகாலை கணபதியாகம், 108 சங்காபிஷேக பூஜை, அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் செல்வ விநாயகர், பாதரிமரத்துஅம்மன், அவிநாசியப்பர், சுப்பிரமணியம், கருணாம்பிகையம்மன், 63 நாயன்மார்களுக்கும் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து தேவாரப் பாடல்கள் கூட்டு பாராயண வழிபாடுகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில், பாஜக மூத்ததலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என செய்தியாளர்களிடம் கூறினார்.
