Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM

திருவாரூரில் தேசிய நெல் திருவிழா; திரளான விவசாயிகள் பங்கேற்பு :

திருவாரூரில் கிரியேட் நமது நெல்லை காப்போம் அமைப்பு சார்பில் தேசிய நெல் திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழாவை மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தொடங்கி வைத்தார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், கே.எஸ்.எஸ்.தியாகபாரி, திருவாரூர் வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில், இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கங்கள் நடைபெற்றன. மேலும், பாரம்பரிய இயற்கை முறை காய்கறி விதைகள், வேளாண் சார்ந்த உபகரணங்கள் போன்ற அரங்கங்கள் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நெல் திருவிழாவின் முக்கிய நோக்கமான ரசாயன உரங்கள் கலப்பின்றி உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய ரகங்களைச் சேர்ந்த விதைநெல் தலா 2 கிலோ வீதம், விழாவில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. அவற்றை சாகுபடி செய்து அடுத்த ஆண்டு 4 கிலோவாக விவசாயிகள் திருப்பியளிக்க உள்ளனர்.

மேலும், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டபொருட்களில் இருந்து உணவு தயார் செய்யப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்த நெல் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x