

தேனி மாவட்டம் கரட்டுப் பட்டியைச் சேர்ந்தவர் சாந்தி (28). திருமணமாகி திருப்பூரில் வசித்து வந்தவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால், கரட்டுப்பட்டியில் உள்ள தாயார் லட்சுமியின் வீட்டில் வந்து தங்கினார்.
மகளின் நகையை அடகுவைத்து மருத்துவச் சிகிச்சைக்கு லட்சுமி ஏற்பாடு செய்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறிய சாந்தி, அறையின் கதவைப் பூட்டிக் கொண்டார். போடி தாலுகா காவல் நிலையத்துக்கு லட்சுமி போன் செய்து தகவல் தெரிவித்தார்.
அவரது வீட்டுக்கு வந்த காவலர் சுரேஷ், சமையல் எரிவாயு வாசனை வந்ததையடுத்து, கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே சென்று சாந்தியை காப்பாற்றினார்.
துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய காவலர் சுரேஷுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே பாராட்டுத் தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.