

வேலூர்: வேலூர் தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத சுயேட்சை வேட்பாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில், போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய கடந்த ஜூன் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 70 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 69 வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு குறித்த கணக்குகளை சமர்ப்பித்தனர்.
ஆனால், வேலூர் சாயிநாதபுரம் ரத்தினவேல் கவுண்டர் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற சுயேட்சை வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கும் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சுயேட்சை வேட்பாளர் பன்னீர்செல்வம் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.