

இரு ஆண்களை கொன்று எரித்து புதைத்த சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் உயிரிழந்தவரின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள சுழிப்பெருக்கிபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (77). முன்னாள் ராணுவ வீரர். இவரின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (47). இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு எழுந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வேலுச்சாமி மாயமானார். அதேபோல முத்துசாமியின் தோட்டத்தில் வேலை செய்து வந்த அம்சவேணி (42) என்பவரது கணவர் ரவி (48) என்பவரும் கடந்த 8 மாதங்களாக காணவில்லை.
இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் மூலனூர் போலீஸாரிடம் அம்சவேணி புகார் அளித்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில், காணாமல்போன வேலுச்சாமி மற்றும் ரவி ஆகியோரை அடித்துக்கொலை செய்து சடலங்கள் எரித்து புதைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதுதொடர்பாக ராணுவ வீரர் முத்துசாமி மற்றும் ரவியின் மனைவி அம்சவேணி ஆகியோரை மூலனூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த வேலுச்சாமியை, அடித்து கொலை செய்து சடலத்தை முத்துசாமி எரித்துள்ளார். யாருக்கும்சந்தேகம் ஏற்படாத வகையில் தனது தோட்டத்திலேயே குழிதோண்டி புதைத்துள்ளார். இது அம்சவேணிக்கும், அவரது கணவர்ரவிக்கும் தெரியவந்தது. இதைக்காரணம்காட்டி முத்துசாமியிடம், ரவி பணம் பறித்துள்ளார்.
இந்நிலையில், முத்துசாமிக்கும், அம்சவேணிக்கும் இருந்த தவறான பழக்கும் ரவிக்கு தெரியவந்தது. இதை அவர் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த முத்துசாமி மற்றும் அம்சவேணி சேர்ந்து ரவியை கொலை செய்துஎரித்து, அதே தோட்டத்தில் புதைத்துள்ளனர். தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கணவரை காணவில்லை என அம்சவேணி புகார் அளித்துள்ளார்.
தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.