

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் நேற்று ஏலம் விடப்பட்ட நிலையில், வணிகர்கள் ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி ஆணையரை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பழைய பேருந்து நிலையம், திருவையாறு பகுதி பேருந்து நிலையம் ஆகியவற்றை ரூ.28.73 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று, தற்போது முடியும் நிலையில் உள்ளன.
புதுப்பிக்கும் பணிகள் தொடங்கும்போது, ஏற்கெனவே இங்கு கடைகள் வைத்திருந்தவர்களுக்கு, பணிகள் முடிந்த பிறகு மீண்டும் கடைகள் வழங்கப்படும் என அதிமுக ஆட்சியில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பழைய பேருந்து நிலைய உட்புறத்தில் 54 கடைகள், திருவையாறு பகுதி பேருந்து நிலையத்தில் 39 கடைகள் என 93 கடைகள் கட்டப்பட்டு, அதற்கான பொது ஏலம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் க.சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
இதனால், மாநகராட்சி அலுவலகம் முன்பாக நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் குவிருந்திருந்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், பொது ஏல நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ மூலம் வெளியில் காத்திருந்தவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.
ஏலம் எடுக்க முன்பணம் செலுத்தியவர்கள் மட்டும் அந்தந்த கடை எண் ஏலத்துக்கு வந்தபோது உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை உள்ளே விட போலீஸார் மறுத்ததால் அவ்வப்போது போலீஸாருக்கும், ஏலம் எடுக்க வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, ஏற்கெனவே பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த வணிகர்கள், திமுக நிர்வாகிகள் சிலர், மாநகராட்சி அலுவலகத்தின் வெளியில் நின்றுகொண்டு, கடைகளை முதலில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். கரோனா காலத்தில் தன்னிச்சையாக செயல்படும் ஆணையரை உடனே மாற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். பின்னர், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், காந்திஜி சாலையில் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.