

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில், சங்கரேஸ்வரி அம்மன் கோயில்களில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடந்தது.
செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் நேற்றுமுன்தினம் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு அம்பாள், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு ஆடிப்பூர அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வளையல் அணிவித்து பூஜைகள் நடந்தன. பின்னர் அம்பாளுக்கு பாசிப்பயறு கட்டி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்றுக்கோயிலான சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று காலை வளைகாப்பு விழா நடந்தது. காலை 9 மணிக்கு கொலு மண்டபத்தில் வளைகாப்பு விழா கணபதி பூஜையுடன் தொடங்கி, சீர்வரிசை தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் 11 சீர்வரிசை தட்டுகள் கோயில் வளாகத்தை சுற்றி வந்து அம்பாள் சன்னதியில் வளைகாப்பு நடந்தது. பூஜைகளை கோயில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார்.