Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM

ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் : வாராந்திர குறைதீர் கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தமிழக அரசு முறையான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அலைபேசி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்தும் மனுக்கள் அளித்தனர்.

பிசி, எம்பிசி, டிஎன்டி சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், "தமிழகத்தில் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்த எந்தஅரசும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கிவரும் இடஒதுக்கீடான 20 சதவீதத்துக்குள் உள் ஒதுக்கீடே செய்யாத நிலையில், முந்தைய அதிமுக அரசால் துரிதகதியில் துரதிர்ஷ்டவசமாக சட்டம் இயற்றப்பட்டு, தற்போதைய திமுக அரசால் மீண்டும் ஆணையிடப்பட்டு, கல்வித் துறை சேர்க்கையில் தற்போது சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வகுப்புவாரி இடஒதுக்கீடு என்பதை புறந்தள்ளி, ஜாதிவாரி இடஒதுக்கீடு செய்திருப்பது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறுத்திவைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தமிழக அரசு முறையான இட ஒதுக்கீடு செய்து, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை, உள் ஒதுக்கீடு இல்லாத எம்பிசி 20 சதவீதத்தை தொடர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிவாயு கிடங்கால் பாதிப்பு

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை அமைப்பினர் அளித்த மனு விவரம்:

திருப்பூர் மாநகர் 31-வது வார்டுக்கு உட்பட்ட கொங்கு பிரதான சாலை அருகே ரயில்வே இருப்புப் பாதைக்கு எதிரில் உள்ள வெங்கடாசலபதி ஆரம்பப் பள்ளி, மாநகராட்சிக்கு சொந்தமானதாகும். இப்பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் கதவுகளை உடைத்து, அங்கிருந்த பொருட்கள் சமூக விரோதிகளால் திருடப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டிடம் பாதுகாப்பின்றி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கருக்கன்காட்டுபுதூரில், 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில், எரிவாயு கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மக்களின் அறியாமையை பயன்படுத்தி, எந்த விவரமும் தெரிவிக்காமல் கிடங்கு அமைக்க ஆயத்தமாகி வருகிறார்கள். இதன்மூலமாக, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தால், பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

விதி மீறி மது விற்பனை

மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் அமைப்பினர் அளித்த மனுவில், "தமிழக அரசு அனுமதித்த நேரத்தையும் மீறி மது விற்பனை செய்வதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, மது விற்பனை செய்பவர்கள் மீது, போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு ரசீது வழங்கும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவர், முகக்கவசம் இன்றியும், எச்சில் தொட்டும் ரசீது வழங்கியதால் பலர் அதிருப்தியடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x