

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சிய கத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தி பப்பு, குமார், அகிலேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் கப்பல்வாடி, தொகரப்பள்ளி, வரட்டனப்பள்ளி, தட்டக்கல், கொல்லஅள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து வரப்பட்டு அரசு அருங்காட்சியக வளாகத்தி வைத்து பாதுகாக்கப்பட்டு வரும் புதிய கற்கால கற்கருவிகளை இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, இக்கருவிகளின் நீளம், அகலம், எடை, விளிம்பு களின் கோணம் உள்ளிட்டவற்றை துல்லியமாக அளவீடு செய்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:
மனித குல வரலாற்றில் முதல் புரட்சி என்பது புதிய கற்காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னர் உணவை மனிதன் வேட்டை மூலம் காட்டில் தேடினான். ஆனால், புதிய கற்காலத்தில் தான் இருக்கும் இடத்திலேயே உணவை உருவாக்க கற்றுக் கொண்டான். இதன் வளர்ச்சியே விவசாயம். அதற்காக கருவிகள் உருவாக்கப்பட்டது. அதுவே இந்த கற்கருவிகள்.
உழவுப் பணிக்காகவும், மரம் வெட்ட கோடாரியாகவும் கற்களையே ஆயுதமாக்கி பயன்படுத்தினர். அந்த கால கட்டத்தில் இந்தியா முழுக்க இவ்வாறு கற்கருவிகள் உருவாக்கப் பட்டுள்ளன. இக்கருவிகள் மூலம் மனித வாழ்வியல் முறைகளை தெரிந்து கொள்ள முடிகிறது. பல்வேறு மாநில கற்கருவிகளை இதற்காக ஒப்பீடு செய்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் தான் தமிழகத்தில் உள்ள கற்கருவிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கற்காலம் குறித்த பல புதிய செய்திகளை வெளிக்கொண்டு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.