கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி மறுப்பால் - சேலத்தில் மலர்கள் விற்பனை 60% சரிவு :

கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி மறுப்பால் -  சேலத்தில் மலர்கள் விற்பனை 60% சரிவு :
Updated on
1 min read

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சேலம் மாவட்டத்தில், கோயில்களில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், பூக்கள் விற்பனை 60 சதவீதம் குறைந்துள்ளது என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் ஆடிப்பண்டிகை கொண்டாட்டம் தமிழக அளவில் புகழ்பெற்றது. இந்நிலையில், கரோனா தொற்றுப்பரவலைத் தடுக்க கோயில்களில் ஆடிப்பண்டிகை கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயில்களிலும் ஆடி விசேஷ நாட்களில் பக்தர்கள் சுவாமி, அம்மன் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் திருவிழா கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் பூக்கள் விற்பனை மிகவும் குறைந்துள்ளது.

இதுதொடர்பாக சேலம் வஉசி பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் ஆடித்திருவிழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் அதிகளவில் நடைபெறும். மேலும், ஆடிவெள்ளி, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால், கோயில்களில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயில்களுக்கு வரும் பக்தர்கள் இன்றி, பூ மாலைகள், உதிரிப்பூக்கள் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது.

தொற்று அச்சம் காரணமாக பொதுமக்களும் பூ மார்க்கெட்டுக்கு வந்து செல்வதும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஆடி மாதத்தில் வழக்கமாக காணப்படும் பூக்கள் விற்பனை 60 சதவீதம் குறைந்துள்ளது. கரோனா ஊரடங்கினால் பூக்கள் விற்பனை ஏற்கெனவே குறைந்த நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது, எங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in