

கரோனா மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 15-ம் தேதி கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று அரசுக்கு கொமதேக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதிமுக ஆட்சியில் கரோனா தொற்று பரவலை காரணம் காட்டி, கிராம சபைக் கூட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. அதிமுக ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் பொதுமக்கள் இருந்ததும், கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணமாக அப்போது பலராலும் பேசப்பட்டது.
கிராம சபைக் கூட்டம் நடைபெறாத காரணத்தால், கிராம பகுதிகளின் வளர்ச்சி தடைப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, கிராமசபைக் கூட்டங்களை நடத்துவதன் மூலம், கரோனா பரவலின் 3-ம் அலைக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். எனவே, அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதலின் படி ஆகஸ்ட் 15-ம் தேதி ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.