Published : 05 Aug 2021 03:20 AM
Last Updated : 05 Aug 2021 03:20 AM

விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படுகிறது - மணப்பாட்டில் தற்காலிக முகத்துவார பாதை : மீன் பதப்படுத்தும் அறை அமைக்கவும் ஆட்சியர் உறுதி

திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு கடற்கரை கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மணப்பாடு கடற்கரையில் அடிக்கடி மணல் திட்டு உருவாகி படகுகள் கடலுக்கு செல்ல முடியாத வகையில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மணல் திட்டு பிரச்சினை அதிகமாக இருக்கும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது மணப்பாடு மீனவர்களின் நீண்டகால கோரிக்கை.

இந்த கோரிக்கையை ஏற்று மணப்பாடு கடற்கரையில் ரூ.45 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மணப்பாட்டில் தற்காலிக முகத்துவார பாதை அமைக்க தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

அதன்பேரில், தற்காலிக முகத்துவார பாதை அமைப்பது தொடர்பாக ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மணப்பாடு கடற்கரையில் நேற்று ஆய்வு செய்தார். படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறும்போது, “ மணப்பாடு கிராமத்தில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதற்கு முன்பாக தற்காலிகமாக படகுகள் கடலுக்குள் சென்று வருவதற்கு ஏதுவாக மணல் திட்டுகளை அகற்றி முகத்துவாரம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மணப்பாட்டில் மீன்களை பதப்படுத்தும் அறை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x