Published : 05 Aug 2021 03:20 AM
Last Updated : 05 Aug 2021 03:20 AM

உடல் நலம் காக்க செய்ய வேண்டியது என்ன? : கன்னியாகுமரி ஆட்சியர் பட்டியல்

நாகர்கோவில்

கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆட்சியர் மா.அரவிந்த் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: ‘நம்உணவே மருந்தாகட்டும், நம் சமையலறையே மருந்தகம் ஆகட்டும்’ என்ற நோக்கத்தில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய இயற்கை மூலிகைகள் மற்றும் மருந்துகளான மஞ்சள்- கற்றாழை கலந்த நீர், சீனிகாரம் கலந்த நீரை பயன்படுத்த வேண்டும். புதினா, ஓமம், நொச்சி இலை, கற்பூரவல்லி இலை, வேப்பிலை, மஞ்சள் மற்றும் நீலகிரி தைலம் கலந்து தினமும் ஒருவேளை நீராவி பிடிக்க வேண்டும். இருவேளை மஞ்சள், கல் உப்பைவெந்நீரில் கலந்து வாய்கொப்பளிக்க வேண்டும்.

ஓமம், கருஞ்சீரகம், பச்சை கற்பூரம் போன்றவற்றை இளம் வறுப்பாக வறுத்து ஒன்றுசேர்த்து பொட்டலமாக்கி முகர்தல் வேண்டும். மஞ்சள், மிளகு, தனியா, அன்னாசிப்பூ, கிராம்பு, சீரகம், பெரு வெங்காயம் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொத்தமல்லி, புதினா, தூதுவளை, நெல்லிக்காய், பிரண்டை ஆகியவற்றை துவையலாகவும், முசுமுசுக்கை, முள்முருங்கை இலை, முருங்கை கீரை ஆகியவற்றை அடையாகவும், கசப்பு சுவையுடைய சுண்டை, பாகற்காய் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிட்ரிக் அமிலத்தன்மை அதிகம் கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் மாதுளை, அன்னாசி பழச்சாறு, இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். துளசி, லவங்கப்பட்டை, சுக்கு, மிளகு, தண்ணீர், நாட்டு சர்க்கரை, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்த மூலிகை தேநீர் குடிக்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ கலந்த தேநீர் அருந்தலாம். கடுக்காய்த்தோல், நெல்லிவற்றல், தான்றிக்காய்தோல் ஆகிய திரிபலா பொடியை சமஅளவு கலந்து அரை தேக்கரண்டி வெந்நீரில் காலை, மாலை உண்ண வேண்டும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சீரகம்கலந்த நீர் பருகலாம். வெண்தாமரை இதழ் 5, ஏலம், சிறிதளவு இஞ்சி, எலுமிச்சை தோல் கலந்த தேநீர் பருகலாம். ஆஸ்துமா நோயாளிகள் திப்பிலி, மிளகு, கற்பூரவல்லி கலந்த தேநீர் அருந்தலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x