நெல்லை மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு வார நிகழ்வுகள் :
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வரும் 7-ம் தேதி வரை கரோனா விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில், பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கை கழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. பல்வேறு மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்கள், டெங்கு, கரோனா நோய் விழிப்புணர்வு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கட்ராமன் , சுகாதார அலுவலர் அரசகுமார் , உதவி பொறியாளர் பைஜூ, இளநிலை பொறியாளர் அய்யப்பன், முதுநிலை பூச்சி வல்லுநர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் முருகன் , சங்கரநாராயணன் , சங்கரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாளையங்கோட்டையிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் சிவராம் கலைக்கூடத்தின் 25 மாணவ, மாணவியர் கரோனா விழிப்புணர்வு சுவர்ஓவியங்கள் வரைந்தனர். மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலட்சுமி, மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, பாளை வட்டாட்சியர் ஆவுடையப்பன், வாசகர் வட்ட துணை தலைவர் கோ.கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை கலால் மற்றும் சுங்கத்துறை கண்காணிப்பாளர் நன்னிலம் கேசவன் விழிப்புணர்வு பாடல் பாடினார். மாவட்ட மைய நூலகர் வயலட் நன்றி கூறினார்.
