

ஆழியாறு தடுப்பணையில் ஆபத்தான பகுதிகளில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள், அணையிலும், அந்த பகுதியில் உள்ள அணைக்கட்டு பகுதியிலும் இறங்கி குளிப்பது வழக்கம். சிலர் ஆழமான பகுதிகளுக்குச்சென்று புதைமணலிலும், சூழலிலும் சிக்கியும் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீஸாரும், பொதுப்பணித் துறையினரும் தடைவிதித்தனர்.
விடுமுறை நாளான நேற்று ஆழியாறு பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள், பள்ளிவிளங்கால் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆழியாறு காவல் உதவி ஆய்வாளர்கள் தங்கதுரை, செம்மணன் ஆகியோர் சுற்றுலா பயணிகளை எச்சரித்து, அங்கிருந்து வெளியேற்றினர். ஆகஸ்ட் 3-ம் தேதி (நாளை) ஆழியாறு அணைப் பூங்கா மற்றும் அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித் துறையினர் தடை விதித்துள்ளனர். தடையை மீறி அணைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.