

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை மூன்று ஆண்டு என்ற நிலையை ஓராண்டாக மாற்ற வேண்டும், என பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு முன்பாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். தொடர்ந்து காலியாக உள்ள தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும்.
பொது மாறுதல் கலந்தாய்வை நேர்மையாக, வெளிப்படையாக நடத்த வேண்டும். தற்போது அரசுமேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள்மாவட்ட மற்றும் வெளி மாவட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தியபிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில், தற்போது பின்பற்றப்படும் மூன்று வருடம் என்பதை மாற்றி பழைய முறைப்படி அதாவது ஒரு வருடம் ஒரு பள்ளியில் பணியாற்றி இருந்தாலே போதும் என்ற அளவில் ஆசிரியர்களை கலந்தாய்வில் பங்கு பெற அனுமதிக்க வேண்டும்.
பணி நிரவலில் சென்ற ஆசிரியர்களுக்கு இந்தாண்டு நடத்தப்பட உள்ள கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பு நிர்வாக காரணத்தை காரணம் காட்டி ஆசிரி யர்கள் யாருக்கும் பணியிட மாற்றம் வழங்கக் கூடாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.