Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கான - குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை பெற சிறப்பு முகாமில் பங்கேற்று மனு அளிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்கள் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பெற மனு அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் கீழ்கதிர்பூர் திட்டப் பகுதியில் 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது.

இவற்றில் 1,406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 706 குடியிருப்புகளுக்கு விருப்பம் உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் காஞ்சிபுரம் பெருநகராட்சி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்கள், அரசுக்கு சொந்தமான நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் வீடற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கப்படும். வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் முன்னுரிமை அளித்து பயனாளிகள் பட்டியலில் சேர்க்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யும் வீடுகளுக்கு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள ரூ.1.50 லட்சத்தை பயனாளிகள் பங்குத் தொகையாக செலுத்த வேண்டும். அனைவருக்கும் வீடு கட்டும்திட்ட விதிகளின்படி அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படும் நபர்கள் இந்தியாவில் தனது பெயரிலோ, தனது குடும்ப உறுப்பினர் பெயரிலோ சொந்த வீடு இல்லாமலும், வருட வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று சான்றளிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத் தலைவி ஆகியோரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் ஆக. 4-ம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x