Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM

மக்களை தேடி மருத்துவம் திட்டம் கிருஷ்ணகிரியில் தொடங்குகிறது : திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

கிருஷ்ணகிரியில் நடந்த கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் பேசினார்.

கிருஷ்ணகிரி / ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைக்க வரும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் நடந்தது. முன்னாள் மாவட்டச் செயலாளர் சுகவனம், மாநில மகளிர் அணி தலைவர் டாக்டர்.காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன் எம்எல்ஏ., துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்ரி கடலரசுமூர்த்தி, சந்திரன், நகர செயலாளர் நவாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தரும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். நகர, பேரூராட்சிக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓசூரில் முதல்வருக்கு வரவேற்பு

இந்தியாவிலேயே முதல் முறையாக மக்களை தேடி மருத்து வம் திட்டத்தை தொடங்கி வைக்க வரும் 5-ம் தேதி ஓசூருக்கு வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஓசூர் - தளி சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், வேப்பனப்பள்ளி முன்னாள் எம்எல்ஏ முருகன், ஓசூர் முன்னாள் எம்எல்ஏ சத்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் ஓசூர் மாநகராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை தொடங்கி வைக்க ஓசூருக்கு 5-ம் தேதி வருகை தரவுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், சிறுபான்மை நலப்பிரிவு மாநில துணைத்தலைவர் விஜயகுமார், ஓசூர் நகரமன்ற முன்னாள் தலைவர் மாதேஸ்வரன் உட்பட மாவட்ட ,வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x