

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மணப்பாக்கம் கிராமத்தில் பாலாற்றங்கரையில் கன்னியம்மன் கோயில்அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆடி மாதத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உள்ளூர், வெளி மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்தப் பகுதிக்கு வருவர்.
இந்நிலையில், கரோனா தொற்று அச்சம் காரணமாக கோயில்கள் மூடப்பட்டு வழிபாடுசெய்வதற்கு தடை செய்யப்பட்டிருந்ததால், கடந்த ஆண்டு வழிபாடுகள் நடைபெறவில்லை. நடப்பாண்டிலும், தொற்று பரவும்அச்சம் உள்ளதால் அம்மன் கோயில்களில் ஆடி மாத கூழ்வார்த்தல் போன்ற வழிபாடுகளை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
எனினும், பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யலாம். அர்ச்சனைகள் செய்யக் கூடாது, பக்தர்களிடம் தேங்காய், பூ, பழம் உள்ளிட்டபொருட்களை வாங்க கூடாதுஎன்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்பேரில், இந்த கோயிலிலும்பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் குடும்பம், குடும்பமாக அமர்ந்து பொங்கலிட்டும், மொட்டையடித்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், மூலவருக்கு அர்ச்சனைகள் செய்யப்படுவதாலும், சிறப்பு தரிசனங்கள் அனுமதிக்கப்படுவதாலும், கோயிலின் உட்பிரகாரத்தில் சமூக இடைவெளியின்றி ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் வரிசையில் அணிவகுத்து பலமணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பாலாற்றில் அமர்ந்துமொட்டையடித்துக் கொள்ளும் நபர்கள், பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து டீசல் மோட்டார்கள் மூலம் இரைக்கப்படும் தண்ணீரில் சமூக இடைவெளியின்றி குளித்து வருகின்றனர். இதனால், கரோனா தொற்று பரவும்அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து, உள்ளூர் கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: கோயில் நிர்வாகம் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு சிறப்பு தரிசனத்தில் பக்தர்களை அனுமதித்து வருகின்றனர். இதனால், கோயிலில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.
மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் பக்தர்கள் அனைவரும் ஒரே இடத்தில் குளிக்கும் நிலை உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், கரோனா தொற்று பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு கோட்டாட்சியர் ஷகிதா பர்வீன் கூறியதாவது: மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் சமூகஇடைவெளியைப் பின்பற்றாதது குறித்தும், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது தொடர்பாகவும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.