Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM

காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் - 1623 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்க கோரிக்கை :

காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரத்து 1623 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ச.கருப்பையா, காங்கயம் வட்டாட்சியர் பி.சிவகாமியிடம் அளித்த மனுவில், "தமிழ்நாடு அரசின் சார்பில், இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களின் நிலங்களை தனியார்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு வருவதற்கு, தலித் இயக்கம் பாராட்டுத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களிலும், அறநிலையத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்து 574 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களின் பெயரில் மட்டும் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் கணக்கில் உள்ளன.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வெள்ளகோவில் பகுதியிலுள்ள உத்தமபாளையம் காசிவிஸ்வநாதர் கோயில் (162 ஏக்கர்),மயில்ரங்கம் வைத்தியநாதர் கோயில் (513.36 ஏக்கர்), வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோயில் (145 ஏக்கர்), கண்ணபுரத்தில் உள்ள செல்வவிநாயகர்-மாரியம்மன்-விக்ரம நாராயணப் பெருமாள் கோயில்கள் (277.59 ஏக்கர்), வள்ளியரச்சல் மாத்தீஸ்வரன் கோயில் (18.57ஏக்கர்), முத்தூர் சோழீஸ்வரர் கோயில் (27.87 ஏக்கர்), லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரன் கோயில் (447.87 ஏக்கர்) ஆகிய 7 கோயில்களுக்கு சொந்தமான ஆயிரத்து 1623 ஏக்கர் நிலங்கள் இன்றுவரை, தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

மேற்கண்ட ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வலியுறுத்தி, 2016-ம் ஆண்டு திருப்பூர் ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். அதன்படி, சென்னை இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 2016 மார்ச் மாதம் இந்து சமய அறநிலையத் துறையின்கோவை இணை ஆணையருக்கு நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்பின், 2017 பிப்ரவரியில் தாராபுரம் உதவி ஆட்சியர் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, காங்கயம் வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 4 ஆண்டுகளான பின்னரும் மேற்கண்ட கோயில் நிலங்கள் எதுவும் மீட்கப்படவில்லை. எனவே, காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளிலுள்ள கோயில்நிலங்களை மீட்பதற்கு தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x