Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

திருச்செந்தூர் சாலை விரிவாக்கப் பணி தொடங்கியது : வி.எம்.சத்திரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் :

திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுகின்றன. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

பிரசித்திபெற்ற ஆன்மிக தலமான திருச்செந்தூருக்கு திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலமும் பக்தர்கள் திருச்செந்தூர் வருகின்றனர். திருச்செந்தூர் சாலையை விரிவாக்கம் செய்யவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது.

தற்போது, சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ், திருச்செந்தூர்- பாளையங்கோட்டை, கோபாலசமுத்திரம்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடியில் சாலைவிரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து விஎம் சத்திரம் வழியாக பாளையங்கோட்டை வரை 50.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.435 கோடி மதிப்பிட்டிலும், கோபாலசமுத்திரம் முதல் கல்லிடைக்குறிச்சி வரை ரூ.202 கோடி மதிப்பிட்டிலும் இந்த மாநில நெடுஞ்சாலை அமைகிறது. இதற்கான தொடக்க விழா திருச்செந்தூரில் சமீபத்தில் நடைபெற்றது.

தற்போதுள்ள சாலை 7 மீட்டர்அகலம் கொண்டதாக இருக்கிறது. இந்த சாலை 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. ஏற்கெனவே உள்ள சாலையில் இருக்கும் வளைவுகள் நேர் செய்யப்பட்டு புதிய சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த சாலைப் பணிகள் 2 ஆண்டு காலத்துக்குள் முடிக்கப்படும்.தமிழகம் தொழில் வளர்ச்சியில் மேன்மை அடைய வேண்டும். அதற்காக சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் இந்த சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இச்சாலையில் அம்மன்புரம் அருகே ரயில்வே மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.

சாலை விரிவாக்கத்துக்காக பழமையான மரங்கள் வெட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்புதெரிவித்து இயற்கை ஆர்வலர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தினர். நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டியிருக்கும் நிலையில், அதற்கு பதிலாக விரிவாக்கம் செய்யப்படும் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நட்டுவளர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மரங்கள் வெட்டப்பட்டுள்ள நிலையில் வி.எம்.சத்திரம் - கிருஷ்ணாபுரம் இடையே சாலைப்பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதனால் வி.எம். சத்திரம் பகுதியில் நேற்றுபோக்குவரத்து திருப்பிவிடப்பட்டிருந்தது. திட்டப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டால், விவரங்களை தெரிவிக்க அவர்கள் முன்வரவில்லை.

மின்பாதை மாற்றியமைப்பு

இதனிடையே, திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டசெய்திக்குறிப்பில், “நெடுஞ்சாலைத்துறை சார்பில் இன்று (29-ம் தேதி) திருச்செந்தூர் சாலைவிரிவாக்க பணிகள் நடைபெறுவதால், சமாதானபுரம் துணைமின் நிலையத்தில் உள்ள காமராஜ் நகர் மின்பாதையில் மின் கம்பம்மற்றும் மின்பாதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 10 மணி முதல் மாலை5 மணிவரை காமராஜ் நகர், நீதிமன்ற திர் பகுதி, சங்கர் காலனி, செண்பகம் காலனி, எம்.கே.பி. நகர் மற்றும் திருச்செந்தூர் சாலை பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x