Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

சீசன் டிக்கெட் பயணிகளை அனுமதிக்க வலியுறுத்தி - ஏலகிரி விரைவு சிறப்பு ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் : 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையத்தில் ஏலகிரி விரைவு ரயிலை மறித்த பயணிகள், மாதாந்திர சீசன் டிக்கெட் பயணி களை அனுமதிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா ஊரடங் கால் ரயில் சேவையில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் முன்பதிவுசெய்யப்பட்ட சிறப்பு ரயில்களாக மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சாதாரண ரயில்களை நம்பியிருந்த சாமானியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டம் அன்வர்திகான்பேட்டை பகுதியில் இருந்து தினசரி சென்னைக்கு சென்று வரும் சீசன் டிக்கெட் எடுத்துள்ள பயணிகள் சிறப்பு ரயிலில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, சென்னையில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயிலை அன்வர்திகான்பேட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதற்கிடையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ஏலகிரி விரைவு ரயில் 28 பெட்டிகள் கொண்டது. தினசரி காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயில் மாலை 6 மணியளவில் மீண்டும் அங்கிருந்து புறப்படும். இந்த ரயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வந்தனர். இந்த ரயிலில் சாதாரண டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டு எடுத்து பயணம் செய்பவர்கள் தற்போதைய முன்பதிவு நடை முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நடைமுறையால் மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்றவர்களை ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதனை கண்டிக்கும் விதமாகவும் ஏலகிரி விரைவு ரயிலில் சீசன் டிக்கெட் பெற்றவர்களை அனுமதிக்க வலியுறுத்தி நேற்று காலை ரயில் மறியல் போராட்டத்தில் பயணிகள் ஈடுபட்டனர்.

அதன்படி, அன்வர்திகான் பேட்டை ரயில் நிலையத்துக்கு நேற்று காலை சுமார் 7 மணிக்கு வந்த ஏலகிரி விரைவு சிறப்பு ரயிலை சுமார் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் பயணிகள் அமர்ந்து கொண்டதால் ரயிலை தொடர்ந்து இயக்க முடியவில்லை.

இதுகுறித்து, அன்வர்திகான் பேட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறும்போது, ‘‘ஏலகிரிவிரைவு ரயிலில் பயணம் செய்யும் மாதாந்திர சீசன் டிக்கெட் பயணிகளை குற்றவாளிகளைப்போல் பிடிக்கும் ரயில்வே நிர்வாகம் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.240 வரை அபராதம் விதிக்கின்றனர். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். அரக்கோணம் வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயிலை அன்வர்திகான்பேட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும், ரயில்வே நிர்வாகம் மறுத்து வருகிறது. சிறப்பு ரயில் என்று அறிவித்துவிட்டு ஏழை மக்களை ரயில்வே நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. ஏலகிரி விரைவு ரயிலில் மாதாந்திர சீசன் டிக்கெட் வைத்துள்ள பயணிகளை அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

இந்த தகவலறிந்த அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ்,துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பயணிகளின் கோரிக்கை தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் ஒரு வாரத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று, போராட்டத்தை பயணிகள் கைவிட்டனர். சுமார் 2 மணி நேரம் தாமதத்துக்குப் பிறகு ஏலகிரி விரைவு ரயில் அங்கிருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. ரயில் மறியலால் சில சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x