கா.பட்டணம் அரசு மருத்துவமனையில் இன்று - ஆக்சிஜனுடன் கூடிய 30 படுக்கை வசதி தொடக்கம் : ரூ.5 லட்சம் மதிப்பில் கேவிஎஸ் குழுமம் ஏற்பாடு

கே.வி.சீனிவாசன்.
கே.வி.சீனிவாசன்.
Updated on
1 min read

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் கேவிஎஸ் குழுமம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியை இன்று (26-ம் தேதி) மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக கேவிஎஸ் குழும நிர்வாக இயக்குநர் கே.வி.சீனிவாசன் கூறியதாவது:

தமிழக முதல்வர் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளால் கரோனா பரவல் குறைந்துள்ளது. முதல்வர் வழிகாட்டுதலின்படி கிருஷ்ணகிரி அடுத்த சப்பாணிப்பட்டியில் ஏற்கெனவே ரூ.30 லட்சம் மதிப்பில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

இந்நிலையில், கரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக நானும், எனது சகோதரர்கள் கே.எம்.சுப்பிரமணியன், கே.எம்.சுவாமிநாதன் ஆகியோருடன் இணைந்து காவேரிப் பட்டணம் அரசு மருத்துவமனையில் ரூ.5 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 30 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு இன்று (26-ம் தேதி) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் டி.செங்குட்டுவன், எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் (ஓசூர்) எம்எல்ஏ மதியழகன் (பர்கூர்) மற்றும் , சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், ஆட்சியர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in