Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் ஆக.15-ம் தேதிக்குள் - மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை : சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில் தகவல்

திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளி களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த டிஆர்ஓ தங்கைய்யா பாண்டியன்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 35 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. மீதமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத் தியது. இதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

அதன்படி, மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி பணிகள் தீவிரப் படுத்தப்பட்டன. திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி யது. இதனால், தடுப்பூசி போடும் பணியை மாவட்ட சுகாதாரத்துறை தீவிரமாக்கியது. மாவட்டம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதித்தவர்களுக்கு இருப்பிடங்களுக்கே தேடிச்சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இப்பணிகள் தற்போது விறுவிறுப்பு அடைந் துள்ளது. திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்ற சுகாதாரத் துறையினர் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தினர்.

இப்பணியை, மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

இது குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9.25 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள், அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுள்ள வர்கள். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையம், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள் என 80-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பணிகளில் 300-க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை முதல் தவணை தடுப்பூசி 2.30 லட்சம் பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 50 ஆயிரம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 15 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்போது கையிருப்பு உள்ளது. நேற்று முன்தினம் கூட 5 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரப் பெற்றுள்ளன.

மாநில சுகாதாரத் துறையிடம் இருந்த தடுப்பூசிகள் வந்தவுடன் அவை பகுதி வாரியாக பிரித்து தடுப்பூசி மையங்களுக்கு அனுப் பப்படுகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக் குறை இல்லாததால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதித்தவர்கள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. திருப் பத்தூர் மாவட்டத்தில் 4,800 மாற்றத் திறனாளிகள் உள்ளனர். இதில் 35 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப் பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, 11 ஆயிரம் கர்ப்பிணிகளில் 2,500 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப் பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லை, வந்தவுடன் 2-வது தவணை போட உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இன்று (நேற்று) ஒரே நாளில் 1,002 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 319 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது’’. என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x