Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

குவாரி உரிமையாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை - குமரியில் கனிமவள முறைகேட்டை தடுக்க குழு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளங்களை அதிக அளவில் வாகனங்களில் கொண்டு செல்வதைதடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரிகளில் இருந்து அளவுக்கு அதிகமாக வாகனங்களில் கற்களை ஏற்றி வருதல், அதனால் சாலை பழுது, சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. எனவே, கற்கள் மற்றும் கனிம வளங்களை கொண்டு செல்வதில் விதிமீறலை தடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதி குவாரி உரிமையாளர்கள், கிரசர் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

சாலைகளை பாதிக்கும் வகையில் வாகனங்களில் கனிம வளங்களை அதிகமாக ஏற்றிச் செல்லக்கூடாது. அனுமதி சீட்டில்வழங்கப்பட்டுள்ள அளவுக்கு மட்டுமே பாரம் ஏற்றிச்செல்ல வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை 22-ம் தேதி வரை அதிக பாரம்ஏற்றிச் சென்றதாக 1,972 வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.39 லட்சத்து 48 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனையில் அதிக பாரம்ஏற்றிச் சென்றதாக 21 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அபராத தொகையாக ரூ.4,31,500 விதிக்கப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் 26 வாகனங்கள் உரிய நடைச்சீட்டின்றி கனிமம் கொண்டு சென்றதாக கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 22-ம் தேதி மட்டும் அதிக கனிம வளங்களை பாரம் ஏற்றிச் சென்ற 16 வாகனங்கள் வருவாய்த்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ரூ.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கனிம வளங்களை அதிக பாரமாக ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுக்க தனி வட்டாட்சியர் தலைமையில் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், கனிமவள உதவி இயக்குநர் விநோத், ஏடிஎஸ்பி சுந்தரம், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமன் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x