Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

பிஏபி விவசாயிகளை பாதிக்கும் வகையில் - ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது : செய்தித் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியரிடம் நேரில் முறையீடு

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் எம்.ஈஸ்வரன் தலைமையிலான விவசாயிகள், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்தனர். அப்போது, அங்கு வந்த செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் சு.வினீத் ஆகியோரிடம் அளித்த மனு:

ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு ரூ.650 கோடி மதிப்பில்கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு தயாராகி வருவதாக, உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்திருந்தார்.

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டம் (பிஏபி) மூலமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் நான்கரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல, கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர்தான் மறைமுகமாக 75 சதவீத அளவுக்கு விவசாயபூமிகளுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. அமைச்சரின் அறிவிப்பு பிஏபி பாசன விவசாயிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும் தற்போதைய நிலையில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஒரு சுற்று தண்ணீர் கிடைக்கிறது. இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால் திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, விவசாயம் அழிந்துவிடும்.

திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் பாசனத்துக்காக ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை செயல்படுத்த பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த திட்டத்துக்கு கேரள அரசு போதிய ஒத்துழைப்பு வழங்காமலும், பேச்சுவார்த்தைக்கு வராமலும் இழுத்தடித்து வருகிறது.ஆழியாறு அணையில் இருந்து 120 கி.மீ. தூரம் உள்ள, ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல முயற்சிப்பதை விவசாயிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஏற்கெனவே காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, திண்டுக்கல் மாவட்டத்தில் வரதமாநதி, பொருந்தலாறு, பரப்பலாறு போன்ற நீர்த்தேக்கங்களும் உள்ளன. அதிலிருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கலாம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காவிரி குடிநீர் திட்டத்தைவிரிவுபடுத்தலாம். அதைவிடுத்து, தண்ணீருக்காக போராடிக்கொண்டிருக்கும் பிஏபி பாசன விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை போல, இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பிஏபி விவசாயிகளை பாதிக்கும் வகையில் ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதைக் கண்டித்து, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் இணைந்து, பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தில் வரும் வாரத்தில் தொடர் உள்ளிருப்புபோராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x