

சேலம் அருகே நண்பரை கொலை செய்த வழக்கில் கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் கொண்டலம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (35). அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன் (42). இருவரும் கட்டிட மேஸ்திரிகள். இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி அம்மாப்பேட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் மதுஅருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையில் பணி தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
இதில், ஆத்திரம் அடைந்த மோகன், கத்தியால் செல்வத்தை குத்திக் கொலை செய்தார். அம்மாப்பேட்டை போலீஸார் மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண்3-ல் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் மோகனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.